Thursday 20 March 2014

குயில் குஞ்சு

அன்னைக்குத்தான் அம்மா காக்காவிற்கு, அது 'குயில் குஞ்சு' என்று தெரிந்தது

தெரிந்த பிறகு "இனிமேல் நாம் சேர்ந்து வாழமுடியாது. போய்விடு" என்றது

பாவம் குயில் குஞ்சு! அது எங்கு போகும்? அதுக்கு என்ன தெரியும்? அது எப்படி வாழும்?

குயில் குஞ்சுவும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தது.
அம்மா காக்கை கேட்கவில்லை. கிளம்பிப் போகச் சொல்லிவிட்டது

குயில் குஞ்சுவால் அம்மா காக்கையைப் பிரியமுடியவில்லை.
அதுவும் அந்த மரத்திலேயே வாழ ஆரம்பித்தது

அம்மா காக்கையைப் போல "கா" என்று அழைக்க முயற்சி செய்தது.
ஆனால் அதற்கு சரியாக வரவில்லை

அதற்குக் கூடு கட்டத் தெரியாது. பாவம் சிறிய பறவைதானே!
கூடுகட்ட அதற்கு யாரும் சொல்லித் தரவும் இல்லை.
அம்மா அப்பா இல்லை. தோழர்களும் இல்லை

குளிரில் நடுங்கியது: மழையில் ஒடுங்கியது: வெயிலில் காய்ந்தது
அதற்குப் பசித்தபோது, தானே இரை தேடத் தொடங்கியது
வாழ்க்கை, எப்படியும் அதை வாழப் பழக்கி விட்டது

ஒரு விடியலில் குயில் குஞ்சு, "கூ" என்று கூவியது
அன்று தானொரு குயில் என்று கண்டு கொண்டது

No comments:

Post a Comment