Wednesday 2 April 2014

தின மரணக் குறிப்புகள்

1.

இது தான்
இப்படித்தான்
இதே தான்
இப்படியே தான்
என்றாகி விட்டது

சாகும்வரை
வாழ்ந்துதான்
தீ…..ர வேண்டியிருக்கிறது.

2.

தோழமைக்கு….

எத்தனைத் தற்கொலைக் கடிதங்கள்
எத்தனைத் தனித்தனிக் காரணங்கள்
எப்படியான சூழல்கள்……
ஆனால்
அத்தனைக் கடிதங்களின்
முகவரியும்
உன்னைச் சுட்டியே.

3.

வாழ்வு பகலெனில்
இரவு மரணம்

தூக்கம் சாவெனில்
வாழ்க்கை – விழிப்பு

இவற்றின் மடங்குகள்தாம்
எல்லாமும்

4.

சாத்தானும் கடவுளும்
வேறு வேறில்லை

கெட்ட கடவுள் சாத்தான் எனவும்
நல்ல சாத்தான் கடவுள் எனவும்
பெயரிடப்படுகின்றனர் -

ஒவ்வொரு மரணத்திலும்
ஒவ்வொரு பிறப்பிலும்

5.

மரணம் கண்டு
மரணம் கேட்டு
மரணம் நுகர்ந்து
மரணம் ருஸித்து
மரணம் தின்று
மரணம் புணர்ந்து
மரணம் உணர்ந்து
மரணத்தோடு
வாழ்வதற்கு
‘வாழ்க்கை’ என்று பேராம்

6.

பயணம்

ஒன்றிலிருந்து
ஒன்று,
வாழ்க்கை

ஒன்றுமில்லாததிலிருந்து
ஒன்றுமில்லாததற்கு,
மரணம்

இருப்பதற்கும்
இல்லாததற்கும்
நடுவே உள்ளதற்கு

என்ன பெயரிட்டு
என்ன?

7.

முகங்களே இல்லாத உலகம்
விடியாத இரவு
அகலாத இருள்
குருட்டு யோசனைகள்
மரணித்த உடல்

கடந்து
வரவே முடியாது
வாழ்நாள் முழுக்க
அந்த இரவை.

8.

நான்
பார்த்துக் கொண்டிருக்கும்போதே
உயிர் போனது
சிறு சலனமுமில்லை
உயிர் பிரிந்த அவதியில்லை
எந்த திசையில்
யார் வந்து
இது நிகழ்ந்தது – தெரியவில்லை

மொத்த உலகமும்
குற்றவாளியாய்த் தெரிகிறார்கள்.

9.

அந்தப் பிரிவிற்கு
மரணத்தையொத்த வலி

தினமும்
ஆஃபிஸ் கிளம்ப
விடை பெறுவது போல
இந்த மரணம்.

10.

வாழ்க்கையில்
கிடைப்பதை விட -
மிக அதிகமாயிருக்கிறது
மரணம் கொடுப்பது.

11.

அது
யார் மனதையும்
அசைத்து விடுகிற அழுகை -
அசையாது கிடக்கிற மரணம்.

12.

ஒழுங்கற்று…..
அழகியலற்று…
இரக்கமற்று…

மரணத்தைப் போலத்தானே இருக்கும்
மரணம் பேசுகிற கவிதையும்.

13.

அழகான விளையாட்டு இது
அவ்வளவு எளிதாக
யாரும் விடுபட்டு விட முடியாது

யார் பெயர் எப்போது
எனத் தெரியாது

மரணத்தின் கண்களைக்
கட்டிவிட்டு நாம் ஆடும்
கண்ணாமூச்சு ஆட்டம்

அல்லது
நம் கண்களைக் கட்டிவிட்டு
மரணம் ஆடுகிற ஆட்டம்

விதிமுறை ஒன்றுதான்
யார் தொட்டாலும் ‘அவுட்’

……………………………………………………………………………………………………………………

2
எஞ்சியது

ரு வார்த்தையிலிருந்து
தொடங்குகிறது
நமக்கான யுத்தம்

அந்த வார்த்தை-
எத்தனை வருடங்களாய்
யோசிக்கப்பட்ட
நினைப்பின் வெளிப்பாடு

அந்த யோசிப்பு -
எத்தனை யுகங்களின்
வாழ்க்கை

கடைசியில்
வார்த்தைதான்
எல்லாவற்றிற்கும் காரணமாம்-
ஏற்றுக்கொள்கிறோம்

யுக யுகங்களை மறுத்து
எஞ்சுகிறது
ஒற்றையாய்
ஒரு வார்த்தை

ஒரு வார்த்தை யிலிருந்து
துவங்குகிறது
நமக்கான யுத்தம்…………

…………………………………………………………………………………………
3

றவைகள் ஒருபோதும்
நடப்பது குறித்து
யோசிப்பது இல்லை

மரங்கள் மலைகள்
இடம் பெயர்வதில்லை

நதிகளுக்கு யார்மீதும்
புகார்களில்லை

நிலவு சூரியன்
கிரமம் தவறுவதில்லை

கடிகாரம்
சலிப்பதில்லை

ஊஞ்சலாடும்போது
உத்தேசமாக பறவை -
நீரில் மீன்-
மழையில் மரம்-
காட்டில் சிறு பூவென இந்த
வாழ்க்கையின்
வண்ணத்துப் பூச்சி நான் !

……………………………………………………………………………………………………………………

4

ரு மழை
ஒரு பயணம்

யாருமே இல்லாத
நீர்க்காட்டில் -
தனித்தனியாக
தொலைந்து போனோம்

ரு கனவு
ஒரு முத்தம்

இப்பவரை யாருடையவை
எனத் தெரியவில்லை -
உன்னுடைய இதழ்களாக
நினைத்துக் கொள்கிறேன்

ரு சந்திப்பு
ஒரு பகிர்தல்

என் கண்களைத் தவிர்த்துவிட்டு
எல்லாரோடும் உன்னால்
உரையாட முடிகிறது -
இனிய தவிர்ப்பு

ரு கவிதை
ஒரு சொல்
நீ

……………………………………………………………………
மலைகள்.காம் (அக் 17, 2013) இதழ் 36

No comments:

Post a Comment