Wednesday 30 April 2014

அன்பின் அலை(க்கழிப்பு)கள்

உடனழைப்பதாகச் சொல்லி
வேலைகளில் தம்மை ஒப்புக் கொண்டு விட்ட
அலைபேசி உரையாடல்கள் மீட்பாரற்று

உன் பத்து நிமிடம் பயணிக்கிறது
ஒருநாளிலிருந்து மறுநாளுக்கு

வரமருள நீ வராமல்
கரையான் புற்று வளர்கிறது
அப்படியே நிற்கச் சொன்ன
உனது ஒரு நிமிடத்தில்

என் தலை நரைக்கத்தொடங்கிய பிறகு
இளமைக் காலத்திலிருந்து வருகிறாய்

அழைத்ததும் அழைக்க மறந்ததும்
எப்போதும் உன் ஞாபகத்திலில்லை

அத்தனை எளிதில்லை - ஒரு
அலைபேசி அழைப்பைப் பற்றிக் கொண்டு
அன்பின் வழி நடத்தல்
அன்பின் மறுதலிப்பை அன்போடு ஏற்றல்
பசித்த கொடிய மிருகத்தை
புன்னகைக்க வற்புறுத்துதல்

(என் எல்லா நட்பூக்களுக்கும் சமர்ப்பணம் )

Wednesday 2 April 2014

2012 மலைகள்.காம்


ந்த ஒரு வருடத்தில்
நரைத்த என் முடிகள் அதிகம்

அழுது வீங்கியவை போல
தூக்கமிழந்த கண்கள்

பசலையில் இளைத்த உடம்பு
பற்றிதான் இலக்கியங்கள் பேசுகின்றன
டிப்ரஷனில் ஊதி
வெடிக்கத் தயாரான
உடல்களை அவை சந்தித்ததில்லையோ-

குறி சொல்பவனிட்ம
கூட்டிப் போவதாக
சக தோழி சொல்கிறாள்

கொண்டவன் இருக்கும் திசையும்
அவன் மனநிலையும் நானறிவேன்

தெரியுமெனில் நேரில் சென்று
சமாதானம் பேசுவோம்
என்கின்றனர் பெரியோர்

அக்னியை வலம் வந்து
செய்த சத்தியத்தை மீற முடிந்தவனை-
வெற்று வார்த்தைகள் என்ன செய்துவிடும்?

நீங்களொருபொழுதும் என்
துன்பத்தைப் பகிர முடியாது

என் பசியைப் போல்
என் தூக்கத்தைப் போல்
என் காமத்தைப் போல்
என் தனிமையைப் போல்
அது நானே
அனுபவித்தறிய வேண்டிய ஒன்று
நானே அமிழவும் மீளவும்
வேண்டிய ஒன்று.
*
 
கடவுளைத் தொந்தரவு செய்யாததற்கு
-சில காரணங்கள்

அவளின் கனவுகள் விழி திறக்குமா
கோபித்துத் தூங்கிய மகளை
எப்படி சமாதானப்படுத்த

ஆஃபிஸ் கம்யூட்டரில்
அடைபட்ட கவிதையை
வாசிக்கச் சொல்லி
நடு நிசியில் நண்பன்

அதெப்படி
தூங்கிய பிறகு மழை பெய்யலாம்
-காலையில் வாதாடும் மகள்

உணவு இடைவேளை விவாதத்தில்
பொதுமைப்பட்டுவிடுகின்றன – எல்லாப்
பிள்ளைகளின் பிடிவாதங்களும்

வாய்பாடு சொல்லியே
வழக்கமாக நிறைவுறும்
வழிப் பயணங்கள்-
வானத்தில் தோன்றும் colour ball-ம்
சிமிட்டும் நஷத்ரங்களும்
தினத்தை அழகாக்குகின்றன

வருடங்களைஉதைத்து
நொடிகளைச் சுவைத்து -
நானும் மகளும்
மகளும் நானும்
விளையாடும் பந்து போல
வாழ்க்கை
*

யாருடைய கிரீடத்தில்
முட்கள் இல்லை -

மனமுவந்து ஏற்கிறேன்
பரிசுகளைப் போலவே
தண்டனைகளையும்

மகிழ்வைப் போலவே
துக்கத்தையும்

உணவைப் போலவே
கழிவையும்

பாராட்டைப் போலவே
பரிகசிப்பை

வெறும் சிலைகளால்
ஆனதல்ல இவ்வுலகம்,
அது மலைகள் நிரம்பியது.

*


ங்கிருந்து தொடங்குவது
கிண்ணத்தில் அமிர்தம்
எந்தப் பக்கம் அருந்தினாலென்ன
எல்லாமும் அதே ருஸி

உன்னை அருந்துகிறேன்

உயரங்களை விட
உயரமாகிறோம்
ஆழங்களை விட
ஆழமாகிறோம்
காதலில் விழுந்து

நீயற்று
உனது காரைக் கடக்கும்போதும்
உணருகிற செல்லத் தவிப்பு -
ஒருபோதும்
உனது பொருள்கள்
அஃறிணை யல்ல

கொஞ்சம் மழை
கொஞ்சம் கடல்
கொஞ்சம் வானம்
கொஞ்சம் பூக்கள்
கொஞ்சம் பறவைகள்
சிறிய வானவில்
நிறைய்ய்ய்ய நீ-
வாழ்வின் முழுமைக்கு.
*

ரு அலைபேசி எண்ணைத் தொலைப்பது
ஒரு மனிதரைத் தொலைத்ததாகிறது -
என்னைத் தொலைக்கிறாய்

*
ன் அன்பை
உனக்குத்
தெரிவிக்க முடியாமலே போகிறது -
கைகளற்றவரின் ரேகைகள்
எதைச் சொல்லும்?
*


ஞாபகமிருக்குமா கடவுளுக்கு,
மனிதனின் அத்தனை தவறுகளும்???
*

ரு தனிமைப் பெண்ணும்
மாலைநேரச்சூரியனும்
கடற்கரைக்குப் போனார்கள்
யாருக்கு அதிக தனிமை
என்று பேச்சு வந்தது
யார்தான் தனியா யில்லை
என்று முடிவானது
*
மலைகள்.காம் (ஆக 18, 2012)

இப்படிக்கு மகள் (கள்)


அம்மா ஒரு மந்திரக்காரி…

தட்டில் வைத்த பழத்துண்டுகள்
வயிற்றுக்குள் சென்றனவா
குப்பைக்குள்ளா
கட்டில் கீழா
சோஃபா பின்னாடியா
-இவள் வயிற்றில் கை வைத்துக்
கண்டு பிடித்து விடுவாள்

இவளின் தொலைந்த
விளையாட்டுச் சாமான்களை
நொடியில் தேடி வரவழைத்துத் தருவாள்

எப்போதும் இவள், அம்மாவிடம்
கைகளை வெட்டித் தரும்படிக் கேட்பாள்-
ப்ரியத்தை செய்யும் கைகள்
அணைக்கும், தலை தடவும்
சோறூட்டும்
குளிப்பாட்டும் கைகள் . . . . . . . .

அம்மா ஒரு சூன்யக்காரி…
அவளின் வசவு சாபத்தைப் போல

‘இப்படியே லேட் பண்ணி
கிளம்பினயானா
வண்டிய வேகமா ஓட்டி
லாரி மோதித்தான் சாகப் போறோம்’

கண்முன் விரியும்
இரத்தக் களறியாய்
இரு சவங்கள்

‘எல்லாக் காயும் சாப்பிடணும்
இல்லன்னா ஒரு கை மட்டும் வளரும்
இன்னொன்னு சின்னதா இருக்கும்’

ஒரு சிறிய்ய்ய கண்
மற்றது பெரிய்யது
ஒரு கை இம்மாம் நீளம்
இன்னொன்று சின்னது
இரண்டு குட்டைக் கால்களுடன்
-ஜந்துக்களாய் உலவும் உலகம்

அம்மா ஒரு கொலைகாரி….

‘ஏன் இப்படி சாகடிக்கிற?
செத்துத் தொலையேன்
பிள்ளையே பிறக்கலைன்னு
நெனைச்சுக்கறேன்’

எப்படிச் சாவது
என்று யோசிக்கத் தொடங்குவாள்

அம்மா ஒரு மாயக்காரி…
அவளுக்கு எல்லாம் தெரியும்
எப்படியோ
எல்லாமும் தெரிந்து விடும்

கடவுளைப் போல கண்காணிக்கிற
சாத்தானைப் போல தண்டிக்கிற
அம்மாவின் மகிழ்ச்சி மட்டும்
இவள் புன்னகைதான்
..........................................

2.


பூமியெல்லாம் மகளுக்கு

கடலும் காற்றும்
மரமும் மலையும்
பூமியின் வளமெலாம் மகளுக்கு

வானம் எனக்கு -
முழுதாகத் தந்துவிட
மனமில்லை அவளுக்கு

முதலில்
பகலெல்லாம் அவளுக்கெனவும்
இரவு எனக்கென்றும் பேசினோம்

வெயில் சுடுவதாக
வேண்டாமென்றாள்
இருளோ பயமுறுத்த-
என்ன செய்வது என்றாள்

கடைசியில் ஒரே முடிவாய்
நஷத்ரங்களை
பப்பாதியாய்ப் பிரித்தாள்

நிலவை -
தேயும் தினங்கள் எனக்கென்றும்
வளரும் தினங்கள் அவளுக்கென்றும்
ஒப்பந்தித்தாள்

இருந்தாலும் கூட
நிலா இல்லாத தினம்
யாருக்கென்று
முடியா வழக்கொன்று
நடந்து கொண்டிருக்கிறது
...............................



மலைகள்.காம் (ஏப்17, 2013) இதழ் 24

தின மரணக் குறிப்புகள்

1.

இது தான்
இப்படித்தான்
இதே தான்
இப்படியே தான்
என்றாகி விட்டது

சாகும்வரை
வாழ்ந்துதான்
தீ…..ர வேண்டியிருக்கிறது.

2.

தோழமைக்கு….

எத்தனைத் தற்கொலைக் கடிதங்கள்
எத்தனைத் தனித்தனிக் காரணங்கள்
எப்படியான சூழல்கள்……
ஆனால்
அத்தனைக் கடிதங்களின்
முகவரியும்
உன்னைச் சுட்டியே.

3.

வாழ்வு பகலெனில்
இரவு மரணம்

தூக்கம் சாவெனில்
வாழ்க்கை – விழிப்பு

இவற்றின் மடங்குகள்தாம்
எல்லாமும்

4.

சாத்தானும் கடவுளும்
வேறு வேறில்லை

கெட்ட கடவுள் சாத்தான் எனவும்
நல்ல சாத்தான் கடவுள் எனவும்
பெயரிடப்படுகின்றனர் -

ஒவ்வொரு மரணத்திலும்
ஒவ்வொரு பிறப்பிலும்

5.

மரணம் கண்டு
மரணம் கேட்டு
மரணம் நுகர்ந்து
மரணம் ருஸித்து
மரணம் தின்று
மரணம் புணர்ந்து
மரணம் உணர்ந்து
மரணத்தோடு
வாழ்வதற்கு
‘வாழ்க்கை’ என்று பேராம்

6.

பயணம்

ஒன்றிலிருந்து
ஒன்று,
வாழ்க்கை

ஒன்றுமில்லாததிலிருந்து
ஒன்றுமில்லாததற்கு,
மரணம்

இருப்பதற்கும்
இல்லாததற்கும்
நடுவே உள்ளதற்கு

என்ன பெயரிட்டு
என்ன?

7.

முகங்களே இல்லாத உலகம்
விடியாத இரவு
அகலாத இருள்
குருட்டு யோசனைகள்
மரணித்த உடல்

கடந்து
வரவே முடியாது
வாழ்நாள் முழுக்க
அந்த இரவை.

8.

நான்
பார்த்துக் கொண்டிருக்கும்போதே
உயிர் போனது
சிறு சலனமுமில்லை
உயிர் பிரிந்த அவதியில்லை
எந்த திசையில்
யார் வந்து
இது நிகழ்ந்தது – தெரியவில்லை

மொத்த உலகமும்
குற்றவாளியாய்த் தெரிகிறார்கள்.

9.

அந்தப் பிரிவிற்கு
மரணத்தையொத்த வலி

தினமும்
ஆஃபிஸ் கிளம்ப
விடை பெறுவது போல
இந்த மரணம்.

10.

வாழ்க்கையில்
கிடைப்பதை விட -
மிக அதிகமாயிருக்கிறது
மரணம் கொடுப்பது.

11.

அது
யார் மனதையும்
அசைத்து விடுகிற அழுகை -
அசையாது கிடக்கிற மரணம்.

12.

ஒழுங்கற்று…..
அழகியலற்று…
இரக்கமற்று…

மரணத்தைப் போலத்தானே இருக்கும்
மரணம் பேசுகிற கவிதையும்.

13.

அழகான விளையாட்டு இது
அவ்வளவு எளிதாக
யாரும் விடுபட்டு விட முடியாது

யார் பெயர் எப்போது
எனத் தெரியாது

மரணத்தின் கண்களைக்
கட்டிவிட்டு நாம் ஆடும்
கண்ணாமூச்சு ஆட்டம்

அல்லது
நம் கண்களைக் கட்டிவிட்டு
மரணம் ஆடுகிற ஆட்டம்

விதிமுறை ஒன்றுதான்
யார் தொட்டாலும் ‘அவுட்’

……………………………………………………………………………………………………………………

2
எஞ்சியது

ரு வார்த்தையிலிருந்து
தொடங்குகிறது
நமக்கான யுத்தம்

அந்த வார்த்தை-
எத்தனை வருடங்களாய்
யோசிக்கப்பட்ட
நினைப்பின் வெளிப்பாடு

அந்த யோசிப்பு -
எத்தனை யுகங்களின்
வாழ்க்கை

கடைசியில்
வார்த்தைதான்
எல்லாவற்றிற்கும் காரணமாம்-
ஏற்றுக்கொள்கிறோம்

யுக யுகங்களை மறுத்து
எஞ்சுகிறது
ஒற்றையாய்
ஒரு வார்த்தை

ஒரு வார்த்தை யிலிருந்து
துவங்குகிறது
நமக்கான யுத்தம்…………

…………………………………………………………………………………………
3

றவைகள் ஒருபோதும்
நடப்பது குறித்து
யோசிப்பது இல்லை

மரங்கள் மலைகள்
இடம் பெயர்வதில்லை

நதிகளுக்கு யார்மீதும்
புகார்களில்லை

நிலவு சூரியன்
கிரமம் தவறுவதில்லை

கடிகாரம்
சலிப்பதில்லை

ஊஞ்சலாடும்போது
உத்தேசமாக பறவை -
நீரில் மீன்-
மழையில் மரம்-
காட்டில் சிறு பூவென இந்த
வாழ்க்கையின்
வண்ணத்துப் பூச்சி நான் !

……………………………………………………………………………………………………………………

4

ரு மழை
ஒரு பயணம்

யாருமே இல்லாத
நீர்க்காட்டில் -
தனித்தனியாக
தொலைந்து போனோம்

ரு கனவு
ஒரு முத்தம்

இப்பவரை யாருடையவை
எனத் தெரியவில்லை -
உன்னுடைய இதழ்களாக
நினைத்துக் கொள்கிறேன்

ரு சந்திப்பு
ஒரு பகிர்தல்

என் கண்களைத் தவிர்த்துவிட்டு
எல்லாரோடும் உன்னால்
உரையாட முடிகிறது -
இனிய தவிர்ப்பு

ரு கவிதை
ஒரு சொல்
நீ

……………………………………………………………………
மலைகள்.காம் (அக் 17, 2013) இதழ் 36