Wednesday 2 April 2014

இப்படிக்கு மகள் (கள்)


அம்மா ஒரு மந்திரக்காரி…

தட்டில் வைத்த பழத்துண்டுகள்
வயிற்றுக்குள் சென்றனவா
குப்பைக்குள்ளா
கட்டில் கீழா
சோஃபா பின்னாடியா
-இவள் வயிற்றில் கை வைத்துக்
கண்டு பிடித்து விடுவாள்

இவளின் தொலைந்த
விளையாட்டுச் சாமான்களை
நொடியில் தேடி வரவழைத்துத் தருவாள்

எப்போதும் இவள், அம்மாவிடம்
கைகளை வெட்டித் தரும்படிக் கேட்பாள்-
ப்ரியத்தை செய்யும் கைகள்
அணைக்கும், தலை தடவும்
சோறூட்டும்
குளிப்பாட்டும் கைகள் . . . . . . . .

அம்மா ஒரு சூன்யக்காரி…
அவளின் வசவு சாபத்தைப் போல

‘இப்படியே லேட் பண்ணி
கிளம்பினயானா
வண்டிய வேகமா ஓட்டி
லாரி மோதித்தான் சாகப் போறோம்’

கண்முன் விரியும்
இரத்தக் களறியாய்
இரு சவங்கள்

‘எல்லாக் காயும் சாப்பிடணும்
இல்லன்னா ஒரு கை மட்டும் வளரும்
இன்னொன்னு சின்னதா இருக்கும்’

ஒரு சிறிய்ய்ய கண்
மற்றது பெரிய்யது
ஒரு கை இம்மாம் நீளம்
இன்னொன்று சின்னது
இரண்டு குட்டைக் கால்களுடன்
-ஜந்துக்களாய் உலவும் உலகம்

அம்மா ஒரு கொலைகாரி….

‘ஏன் இப்படி சாகடிக்கிற?
செத்துத் தொலையேன்
பிள்ளையே பிறக்கலைன்னு
நெனைச்சுக்கறேன்’

எப்படிச் சாவது
என்று யோசிக்கத் தொடங்குவாள்

அம்மா ஒரு மாயக்காரி…
அவளுக்கு எல்லாம் தெரியும்
எப்படியோ
எல்லாமும் தெரிந்து விடும்

கடவுளைப் போல கண்காணிக்கிற
சாத்தானைப் போல தண்டிக்கிற
அம்மாவின் மகிழ்ச்சி மட்டும்
இவள் புன்னகைதான்
..........................................

2.


பூமியெல்லாம் மகளுக்கு

கடலும் காற்றும்
மரமும் மலையும்
பூமியின் வளமெலாம் மகளுக்கு

வானம் எனக்கு -
முழுதாகத் தந்துவிட
மனமில்லை அவளுக்கு

முதலில்
பகலெல்லாம் அவளுக்கெனவும்
இரவு எனக்கென்றும் பேசினோம்

வெயில் சுடுவதாக
வேண்டாமென்றாள்
இருளோ பயமுறுத்த-
என்ன செய்வது என்றாள்

கடைசியில் ஒரே முடிவாய்
நஷத்ரங்களை
பப்பாதியாய்ப் பிரித்தாள்

நிலவை -
தேயும் தினங்கள் எனக்கென்றும்
வளரும் தினங்கள் அவளுக்கென்றும்
ஒப்பந்தித்தாள்

இருந்தாலும் கூட
நிலா இல்லாத தினம்
யாருக்கென்று
முடியா வழக்கொன்று
நடந்து கொண்டிருக்கிறது
...............................



மலைகள்.காம் (ஏப்17, 2013) இதழ் 24

No comments:

Post a Comment